அவர் சிரித்தாலே அந்தாதி , பாரதியின் சரி பாதி?!
அன்றொரு நாள்
அந்தி வேளை,
யாரும் இல்லா
அழகிய பூஞ்சோலை
சிவந்த வானம்,
சில்லென்று தென்றல்,
புல்வெளி போர்வை,
சற்று தொலைவிலே -
நிறைய வானமும் நீலமுமாய்
கடல் கரை,
எனக்குள் எதோ இனம்புரியாத மகிழ்ச்சி
எதோ அதிசயம் நடக்க இருப்பதாய் ஒரு சமிஞ்ஞை

என் விழித்திரையில் ஓர் உருவம்,
தங்கம் போல் மின்னும் மேனி,
பால் போல் ஒளிரும் புன்னகை,
கண்களிலே கவிமணக்கும் தெய்வீகம்,
சந்தனக்கட்டை போல உடல்வாகு
பட்டிலே வேட்டி கட்டி,
கொஞ்சம் நளினமாய் - நடக்கும் பாவம்!!
அவராக இருக்குமோ?
திருக்குறளை தவிர எல்லா இலக்கியமும்
படைத்தவர் இவரென்ற பலகாலம் நினைத்தேனே?
சொல்லாத தத்துவமும்,
பாடாத உணர்வுகளும் இல்லை
என அறிஞர் பல பாராட்ட கேட்டேனே
அவர்தானோ?!
விமர்சிக்க ஆசைகொண்டே படிக்கலானேன்,
விதியோ நான் அவரின் மொழி நடைக்கு அடிமையானேன்
தித்திக்கும் தனி நடையால் தமிழரினம் குளிருவித்த
அறிஞர்அவர் - முதன்முதலாய் தனக்கு தானே இரங்கற்பா
பாடிவைத்த மகாகவியோ?
அந்த முன்நெற்றி வழுக்கயில்தான் முத்தமிழ் சங்கமிக்கும்,
அரசியல் ஆன்மீகம், திரைப்பாடல்,
எல்லாமே தித்திக்கும் - தமிழ்தேனோ?
கிண்ணத்தில் மது ஊற்றி அன்றாடம் மகிழ்ந்தாலும்
கிண் என்ற போதையிலும் தெள்ளு தமிழ் தரும் புரவலனோ?
பாவை கனி இதழில், களித்து கிடப்பவன் என்றே
வீணர்கள் வசை சொன்னாலும்
கண் மூடும் காலம் வரை
கன்னித்தமிழ் கண்ணியம் காத்துநின்ற கவிதானோ?
செட்டிநாட்டில் பூத்து வந்த செந்தூர பூதானோ?
செந்தமிழால் எந்நாளும்
தமிழ் மண்ணை குளிர்வித்த நல்கவியோ?!
கண்ட கழுதை எல்லாம் குடித்துவிட்டால்
கவியரசர் ஆகுமோ?
பிழையில்லா கவிதந்த பெருங்கவிஞன் குடித்ததனால்
தமிழ் மொழிதான் தேயுமோ?
என்று விசனித்து கிடந்ததே தமிழ் மண்ணும்,
அந்த அமரகவிதானோ?
அவர் சிரித்தாலே அந்தாதி,
பாரதியின் சரி பாதி?!
கவியரசர்,
வணங்காமுடி,
முத்தையா....மாட்டு வண்டி போகாத ஊரும்பாட்டு வண்டி ஓட்டியவர்வெறும் இலக்கியமாய் இருந்த மொழியைதனித்துவமாய் மாற்றியவர்,மறப்போமோ மன்னவனைதேன் தமிழ் தென்னவனை?!
கால்கள் மெல்ல அருகில் செல்ல
கண்கள் மெல்ல அதிசயத்தில் துள்ள
அய்யா வணக்கம் என்றேன்,
வாழ்த்துங்கள் என்றேன்,
நல்லது நினைத்திரு!!
எந்நாளும் உழைத்திரு!!
நல்லதே நடந்திடும்!!!
- தமிழ் சித்தர் வாழ்த்துரைத்தார்
சிறுகூடல்பட்டியில் வண்ணச்சிறகை பறக்கவிட்டு
விண்ணுலகம் வரை தமிழ் மொழியை ஏத்திவிட்டு
சிகாகோ நகரில் சிறகை சிறையி ட்டதேனோ?
"விழியில் ஒளியிருந்தும் குருடர்களாய்,
செவியில் ஒலியிருந்தும் செவிடர்களாய்,
உண்மை புரிந்திருந்தும் மூடர்களாய்,
வாழ்பவர்க்கு பாடுவதில் பயனுண்டா?
என்றெண்ணி எம்பெருமான் தம்மிடத்தே அழைத்தார்"
என் வார்த்தைகள் கொஞ்சம் மௌனத்தில் தவித்திட,
ஏதேனும் பேச எண்ணி ஏதேதோ பேசலானேன்,
அய்யா புகைப்படம் எடுத்து கொள்ளலாமா?
- எதற்கு?
உங்களை கண்டேன் என்றால் எவருமே நம்ப மாட்டார்,
திங்களை காண்பது அமாவாசைக்கு எளிதாமோ !?!
சொன்னாலே எவருமே எள்ளி நகைஆடிடுவார்,
யாரிடமும் சொல்லாதே சொல்வதனால் என்ன பயன்?
சொல்லாமல் போனாலும் பலன் ஒன்றும் இல்லை,
காட்சியை கண்டதற்கு கண்களுக்கு சாட்சி உண்டா?
அன்னையின் அன்புக்கும், தந்தையின் பரிவுக்கும் காரணம் சொல்ல வேண்டா?
ஆயிரம் கவலைகள் வந்தாலும் தாங்கிடும் நெஞ்சம் பெறுவாய்,
பெரியவர் சிறியவர், வலியவர், செல்வர் என அனைவரும் போற்ற வாழ்வாய்,
புகழிலே மலையென, செல்வ செழிப்புடன் எந்நாளும் நலமாய் வாழ்வாய்
அடிக்கடி வருகிறேன்,
ஆழ்மனம் திறந்துவை ...
வருகிறேன் தம்பி , வாழ்க வளமுடன் !!!
கண்மூடி திறப்பதற்குள்
பறந்தாரோ மறைந்தாரோ - தெரியாது
நித்திரை கலைந்ததும் ,
விழித்திரை விலக
என்னிடம் பேசிக்கொண்டேன்,
கனவோ கற்பனையோ,
சிந்தையில் வந்ததோ தெரியாது,
எவரிடம் சொல்வது,
சொன்னால் கேட்பாரோ,
பைத்தியம் என்பாரோ ?
கற்பூர தமிழ் கொண்டு,
கவியாலே நமை வென்ற,
கவிக்கோவை மறப்பேனா நான்
கனவிலோ நினைவிலோ
எதுவாக இருந்தாலும் அவர் தமிழ்தானே
நம் வாழ்கை நெறியானது
எந்நாளும் தன் பாட்டால் தமிழ் வாழ
வழி செய்த கவிஞரை வாழ்த்திடுவேன்,
உச்சியில் சென்றபோதும்,
உணர்ச்சியில் தவித்தபோதும்
எந்நாளும் நாம் வாழ
பல்சுவை பாடிய
கவிஞர் புகழ் பல்லாண்டு வாழியென
எந்நாளும் வாழ்த்திடுவோம்,
தமிழ் கவியை போற்றிடுவோம்
- கு ஸ்ரீமணிகண்டன்
தம்பி நல்ல தமிழ் புலமை உனக்கு... மனம்திறந்த வாழ்த்துக்கள்..
ReplyDeleteநிறைய எதிர் பார்க்கிறேன் ...
நன்றி அண்ணா
ReplyDelete