வாலி - தனி கவிதைகள்!!! - சில நீங்கள் வாசிக்க!!!
கவிஞர் வாலி அவர்களின் தமிழ் புலமையும் வளமையும் உணர வேண்டுமானால் அவரது தனி கவிதை தொகுப்புகளை படித்து பாருங்கள் அவர் எத்தகைய சிறப்பான கவிஞர் என்பது புலப்படும்
இதோ அவரின் முத்தான தனி கவிதைகளில் என் மனம் கவர்ந்தவைகளில் சில ....
அதென்ன வாலி என பேரு ஆனா வால் இல்லையே என்ற விமர்சனத்துக்கு எழுதிய பதில் கவிதை,
"வாலில்லை என்பதனால்வாலியாகக் கூடாதா?காலில்லை என்பதனால்கடிகாரம் ஓடாதா?"
நமக்கெல்லாம் எதிர்காலம் எப்படி இருக்குமோ!?!? என்று திரு நாகேஷ் அவர்கள் இளமை காலங்களில் போட் கிளப்பில் ஒன்றாக இருந்த போது புலம்பிய வேதனைக்கு ஆறுதலாய் தந்த கவிதை ...
"கால மகன் கட்டிவைத்த ஆலமர ஊஞ்சலிலே ஏழை மக்கள் ஆடுகின்றார் ஆராரோ ஆராரோ இதில் எதிர்கால மன்னவர்கள் யார் யாரோ? யார் யாரோ?"
கும்பகோணம் தீ விபத்தில் குழந்தைகள் பலியான பொழுது சிந்திய கண்ணீர் கவிதை
"கோவில்கள் அதிகம் கொண்ட ஊராமே குடந்தை - அப்படியென்றால் இந்த அக்கிரமத்திற்கு அத்துணை தெய்வங்களுமா உடந்தை"
ஹைக்கூ !!!
தன் தலையைச்சீவியவனுக்கே !தண்ணீர் தருகிறதுஇளநீர்
தன் தோலை உரித்தவனின் கண்களில் நீர் வர வைக்கிறது வெங்காயம் - சுயமரியாதை !!!
அதனால் தான் பெரியாருக்கு அதிகம் வெங்காயம் பிடிக்கிறது
குசும்பின் உச்சம்:
மலைகள் மண்மாதாவின் மார்பகங்கள் ...
இவ்வளவு பெரியதா ?என்று ஆச்சிரியப்படவேண்டாம்
எவ்வளவுமேகக் குழந்தைகள்அத்தனைக்கும்பாலுட்ட வேண்டாமா ?
தமிழ் வாழ்த்து:
கொடிவருடிப் பூந்தென்றல்குலவுகின்ற தென்பொதிகைமடிவருடிப் பூத்தவளே!மணித்தமிழே! மாற்றாரின்அடிதிருடிப் பாடாமல்அம்மா!நின் அரவிந்தஅடிவருடிப்பாட என்னைஆளாக்கி வைத்தனையே!
தத்துவம்:
மரம்
நம்மைக் கொண்டு எத்தனைசிலுவைகள் செய்கிறார்கள்..ஆனால் அவர்களுக்குள் ஒருஇயேசுவைப் படைக்க முடிய வில்லையே!
நிழல்
சாக்கடையில் விழுந்தாலும்சந்தனத்தில் விழுந்தாலும்எதுவுமே -ஒட்டிக் கொள்ளாமல்உள்ளது உள்ளபடியேஎழுந்து வருகிறது -என்னுடைய நிழல்.நிழலுக்கு இருக்கும் - இந்தநிட்காமிய ஞானம் - என்உடலுக்கும் வாய்க்குமாயின்-ஆதிசங்கரரைப் போல்அடியேனுக்கும் -கள்ளும் ஒன்று; காய்ச்சிய ஈயமும் ஒன்று!
ரொம்ப கடினமாக இருக்கும் செய்திகளையும் மிக எளிமையாக கவித்துவமாக சொல்வதில் வாலிக்கு நிகர் வாலி தான்
கலைஞர் அவர்கள் அதிகம் ரசிக்கும் கவிஞர்களில் கவிஞர் வாலி பிரதானமானவர் - கலைஞர் அருமை என்று பாராட்டிய வரிகள் இவை
ராமன் அவதரித்ததை தன்னுடைய அவதார புருஷன் காவியத்தில் இரண்டே வரிகளில் சொல்லிவிடுவார்
" சர்பத்தில் படுத்தவன் - கோசலையின் கர்பத்தில் படுத்தான்"
சீதையின் அசோகவன தவிப்பை வார்த்தைகளால் வார்த்திருப்பார்...அதன் அழகே தனி...
எனை மீட்க- ஐயன் வரலாம் மீட்டபின்ஐயம் வரலாம்நான் சிறை நீங்கினாலும் - என்கறை நீங்குமா ?
மாற்றான் வசமிருந்தமனையாளை - மன்னவன்மனம் ஏற்றாலும்- ஊர்ச்சனம் ஏற்குமா? - உற்றார்இனம் ஏற்குமா ?
என்னைக்கறந்தபால் என்றுகணிக்குமா ?- இல்லைதிரிந்த பால் இன்றுதவிர்க்குமா ? நான்ஆதரித்த அருங்கற்புஅப்பழுக்கு அற்றதென்றுமூதரித்தல் எவ்வாறு ?- அதுமுடியாத பட்சத்தில்- ஏனிங்குமுடங்கியிருக்க வேண்டும் - ஓர்அடிமையாய் இவ்வாறு ?
இன்னும் ... உயிர்த்தென்ன புண்ணியம் ? உயிர்நீப்பதே கண்ணியம் , வற்கலை அணிந்திருந்தவைதேகியின் உள்ளத்தில்தற்கொலை எண்ணம தலையெடுக்க
ஒரு -குரக்கத்திக் கொடியைக்கழுத்தில் சுற்றி - அவள்சுருக்கிட்டுக் கொண்டு சாக நினைக்க ... அன்னையின் எதிரில்அனுமன் குதித்தான் அன்னைக்கு அனைத்தனையும்ஆதியோ டந்தமாய்அனுமன் விளக்கினான் அன்னையின்அகத்தில் அப்பியிருந்தஐயப்பாடு எனும் - அழுக்கைத் துலக்கினான் வார்த்தைகளால் - வள்ளல் ராகவனின் -கருமேனியை - வண்ணத்திருமேனியை- ஒருவரைபடமாய் வரைந்துகாகுத்தன் மனைவிக்குக்காட்டினான், பின்புநம்பி சொன்னவற்றை அம்பிகைக்குச் சொல்லி- நம்பிக்கையை ஊட்டினான். மகிழ்ந்தாள்- மைதிலிநெகிழ்ந்தாள் ........... பேரானந்தத்தில் - பிராட்டிபேச்சற்று நின்றாள் கணையாழியை- ஈரக்கண்களால் தின்றாள்
கோவலனின் வாழ்கையையும் இரண்டே வரிகளில் பதிவு செய்து கலைஞரின் பாராட்டை பெற்றார்
" புகாரில் பிறந்தான் புகாரில் இறந்தான்"
நிலநடுக்கம்
இவர்கள் கண்மூடிப்போனதால்
மண்மூடிப்போக வில்லை..
மண்மூடிப்போனதால்
கண்மூடிப் போனவர்கள்..
ஊக்குவிக்க ஆளிருந்தால்
ஊக்குவிக்க ஆளிருந்தால்
ஊக்கு விற்கும் ஆள் கூடத்
தேக்கு விற்பான்!
மாண்புமிகு மழையே
மாண்புமிகு மழையே! உனக்கொரு
மடல்! நீ
எவ்வளவு பெய்தாலும்
ஏற்க வல்லது
கடல்கொண்ட
குடல்;
ஏற்க
ஏலாதது
குடல் கொண்ட
உடல்!
நீ பெய்யலாம்
நூறு அங்குலம்; அன்னணம்
பெய்தால் என்னணம்
பிழைக்கும் எங்குலம்?
அடை மழையே!
அடை மழையே! உன்
மடையை உடனே
அடை மழையே!
கொடுப்பதும் மழை;
கெடுப்பதும் மழை;
இது
இரண்டாயிரம் ஆண்டுகள் முன்
தாடி வைத்த தமிழ்
பாடி வைத்த தமிழ்!
அளவோடு பெய்தால்
உன்பேர் மழை;
அளவின்றிப் பெய்தால்
உன்பேர் பிழை!
தாகம் _
தணிய....
உன்னைக் குடித்தோம் என்றா
எங்கள்
உயிரை நீ குடிக்கிறாய்?
மழைக்கே தாகமா? _ எமனுக்கு
மற்றொரு பெயர் மேகமா?
சவத்தைக் குளிப்பாட்டினால் அது
சடங்கு; நீ
குளிப்பாட்டியதால் நிரம்புகிறதே சவக்
கிடங்கு!
நீரின்றி
நிற்காது உலகு; எங்கும்
நீராகவே இருந்தாலும்
நிற்காது உலகு!
பூகம்பம்;
புகைவண்டி;
புயல் வெள்ளம்;
என
ஏனிப்படி...
குஜராத்தைக்
குறி வைத்து
இடையறாது தாக்குகிறது
இயற்கை? உன்னொத்த
இயற்கையைத் தண்டிக்காது
இருப்பதேன் இறைக்கை?
விண்ணிலிருந்து
வருவது தண்ணீர்;
கண்ணிலிருந்து
வருவது கண்ணீர்;
எனினும்
எஞ்ஞான்றும்
தண்ணீரைப் பொறுத்தே
கண்ணீர்!
தெய்வம்
தொழாது
கொழுநன்
தொழுவாளைப் போலே...
மழையே!
மாந்தர்
பெய் எனும்போது
பெய்; உனது
பெயரை என்றும்
பெயராமல் வை!
வாலியின் சாடல்
வங்கக் கடல் கடைந்த செங்கதிர் வண்ணம் போல்
சிங்கத் திருமுகம் செவ்விதழில் புன்சிரிப்பு!
வெள்ளம்போல் கருணை, வள்ளல் போல் வடிவம்
என்று எழுதுவதற்கு முன் ..
பாமலைப் பாடியிவன் பெருமைகளைப் பேசுகையில்
காமலைக் கண்கள் என்னை காக்காய் எனத் தூற்றும்!
நாய்க் குரைத்தால் நாய்க்குத்தான் வாய் வலிக்கும் தெரியாதா?
நேற்றுவரை போற்றுவதும், போற்றிப் பின் தூற்றுவதும்
காற்றடிக்கும் திசை மாறும் காற்றாடி குணம் கொண்டு
நாவிதன் கத்தியென நாவைப் புரட்டுவோர்
காவியக் கவிஞரென கொலுவிருக்கக் கண்டதுண்டு!
அதுபோல வரவில்லை, அவதூறும் பெறவில்லை! ..
அகிலாண்டேஷ்வரிக்கு நன்றி
ஆனைக்கா அம்பிகையின்
அடியொற்றிப் பாட்டிசைத்தால்
மோனைக்கா பஞ்சமுண்டு?
முற்றெதுகை முதலான
சேனைக்கா பஞ்சமுண்டு?
சூழ்கொண்ட செந்தமிழின்
சோனைக்கா பஞ்சமுண்டு?
சுடர்கவிதை துளிர்க்காதோ?
தாய்த்தமிழை இகழ்வோர் முகத்தில் உமிழ்- தமிழா! தமிழா!
தமிழா! தமிழா!உனக்கும் எனக்கும்-தாயால் வந்தது யாக்கை;தமிழால் வந்தது வாழ்க்கை;
எனவேஎஞ்ஞான்றும்...தாயைத்தமிழை -வாழ்த்தப் பழக்கிடுவாக்கை வழங்கும் நாக்கை;
அகரத் தமிழை ஆயுள் மூச்சாய் -நுகரச் சொல்லிடு மூக்கை;
அன்னணம்ஆயின் -அறவே தவிர்க்கலாம்அறியாமை என்னும் சீக்கை;
நுண்மான்நுழைபுலத்தால்-அடையலாம் நீஅரிமா நிகர்த்த நோக்கை!
தமிழனே! என்தோழனே!
அமிழ்தம் அனையதுதமிழ்; அதில் நீஅமிழ்; அமிழ்ந்துஇமிழ்; இமிழ்ந்துகுமிழ்;
ஆங்கிலம்அளவு-சோறு போடாது தமிழ் -எனச்சொல்வோர் முகத்தில் உமிழ்!
குறளும், காவியக் கவிஞரின் வசனகவிதைப் பொருளும்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
பகவன் முதற்றே உலகு.
அக்கரங்களின்ஆரம்ப மாவதுஅகர உயிர்;
அஃதே போல்அனைத்திற்கும்ஆதியா யிருந்துஆக்கவல்ல...
அக்கரங்களில்ஆரம்ப மாவதுஅகில உயிர்!
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
மழை - ஒருமகத்தான சொல்;மற்றவர்க்கும் - அதன்மகத்துவம் சொல் !
உலகோர் -உண்ணும்...
ஆகாரத்திற்கு அதுவேஆதார மாகும்; அங்ஙனம்ஆதார மான அதுவேஆகார மாகும் !
நீருணவு;சோறுணவு; என -ஈருணவாய் இருப்பது மழை !
அதை -ஏத்திப் பிழை;ஏத்தாதிருப்பது பிழை !
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
இல்லறம் - எனஇயம்பப் பெறும் -
வாழ்க்கைவயலில்....
அன்பும் அறனும் விதைநெல்;பண்பும் பயனும் விளைநெல் !
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.
உள்ளதைஉள்ளபடி - தன்உள்ளத்திற்குஉரைப்போ ரெலாம் -உலகத்தார்உள்ளங்களின் -உள்ளே போய்உட்காரலாம் !
கண்ணதாசன் மறைந்தபோது எழுதிய இரங்கல் கவிதை
கண்ணதாசனே ! – என்அன்பு நேசனே !நீதாடியில்லாத தாகூர் !மீசையில்லாத பாரதி !
சிறுகூடற் பட்டியில்சிற்றோடையாய் ஊற்றெடுத்துசிக்காகோ நகரில்சங்கமித்த ஜீவ நதியே !
உனக்குமூன்று தாரமிருப்பினும் – உன்மூலா தாரம் முத்தமிழே !
திரைப் பாடல்கள்உன்னால் -திவ்வியப் பிரபந்தங்களாயின !
படக் கொட்டகைகள்உன்னால்பாடல் பெற்ற ஸ்தலங்களாயின !நீஆண் வேடத்தில்அவதரித்த சரஸ்வதி !
கண்ணனின் கைநழுவிமண்ணில் விழுந்தபுல்லாங்குழல் !
அயல் நாட்டில்உயிர் நீத்ததமிழ்நாட்டுக் குயிலே !
பதினெட்டுச்சித்தர்களுக்கும்நீஒருவனேஉடம்பாக இருந்தாய் !நீபட்டணத்தில் வாழ்ந்தபட்டினத்தார் !
கோடம்பாக்கத்தில்கோலோச்சிக் கொண்டிருந்தகுணங்குடி மஸ்தானே !நீதந்தையாக இருந்தும்தாய் போல்தாலாட்டுக்களைப் பாடியவன் !
இசைத் தட்டுகளில் மட்டுமல்ல -எங்கள் நாக்குகளிலும்உன்படப் பாடல்கள்பதிவாகி யிருக்கின்றன !உன்மரணத்தால்ஓர் உண்மை புலனாகிறது..
எழுதப் படிக்கத் தெரியாதஎத்துணையோ பேர்களில் -எமனும் ஒருவன்.
அழகிய கவிதைப் புத்தகத்தைக்கிழித்துப் போட்டுவிட்டான் !
காவேரி
நடந்தாய் வாழி நடந்தாய் வாழி என காவேரியை பாடினான் உடையில் காவி ஏறி நின்ற இளங்கோ அந்த காவேரி பெண்ணின் கால்களுக்கு இன்று விளங்கோ - இன்னனம் விளங்கு இட்டவன் இரண்டு கால் விலங்கு !!!
புதுக்கவிதை
நானஎங்க அம்மா, எங்க அக்கா,எங்க அண்ணா,என் தம்பி,என் தங்கச்சி,எல்லாரும் பீடி சுத்துரோம் எங்க அப்பா ஊற சுத்துறார்!!!!
பல இரவுகளில் என் கண்களை தூக்கம் தழுவ மிக எளிமையான வழி - இளையராஜாவும் வாலியும் இணைந்த பல பாடல்களில் உள்ளது
அதில் மிகவும் சிறப்பானதாய் நான் கருதுவது....
"மாசறு பொன்னே வருக! திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக!!மாதவன் தங்காய் வருக! மணிரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக!!கோல முகமும் குறுநகையும் குளிர்நிலவெனநீலவிழியும் பிறைநுதலும் விளங்கிடும் எழில்நீலியென சூலியெனத் தமிழ்மறை தொழும்
நீர் வானம் நிலம் காற்று நெருப்பான ஐம்பூதம் உனதாணைத் தனையேற்றுப் பணியாற்றுதே!பார் போற்றும் தேவாரம் ஆழ்வார்கள் தமிழாரம் இவையாவும் எழிலே உன் பதம் போற்றுதே!திரிசூலம் கரம் ஏந்தும் மாகாளி உமையே!கருமாரி மகமாயி காப்பாற்று எனையே!பாவம் விலகும் வினையகலும் உனைத்துதித்திடஞானம் விளையும் நலம் பெருகும் இருள் விலகிடும்சோதியென ஆதியென அடியவர் தொழும்
வாலியின் அற்புத படைப்புகளில் சில
- நானும் இந்த நூற்றாண்டும்
- ராமானுஜ காவியம்
- கிருஷ்ண விஜயம்
- பெண்ணின் பெருந்தக்க யாவுள
- பட்டத்து யானையின் பவனி
- நினைவு நாடாக்கள்
- மண் மக்கள் மொழி ..(முற்று பெறாதது ....)
இன்னும் பல ....
வாழ்க தமிழ்!!!
வளர்க வாலி புகழ் !!!
நன்றி
கு ஸ்ரீமணிகண்டன்
அருமை தோழரே
ReplyDeleteபடிக்க படிக்க இனிமையாக
ReplyDeleteஇருந்தது👍👍
ஆஹா அருமை "தமிழ் தானே" என்று சொல்லுப்பவர்களுக்கு "தமிழ் தேனே".... என்று உணர்த்தியது படிக்க படிக்க நான் இன்ப வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்தேன்...👍
DeleteVaali jaaliyagavum elithuvaar
ReplyDeleteJoliyagavum eluthuvaar"
Kealiyaagavum eluthuvaar'
Arumai kavinjar...
Avare enakku aathma kuru
Ungal phone number venum9894887705 vaali ayyaa. Kurithu aayvu seykiren thodarpujul vaanka
ReplyDelete