என் வாழ்வில் வளம் சேர்க்கும் அனைத்து மகளிர்க்கும் இக்கட்டுரை காணிக்கை..,
என் வாழ்வில் வளம் சேர்க்கும் அனைத்து மகளிர்க்கும் இக்கட்டுரை காணிக்கை..,
இது பெண்ணின் பெருமை பேசும் மாதம் ஆதலால் இது சரியாக பொருந்தும் என்றே கருதுகிறேன். வரலாற்றில் பல புதுமை பெண்கள் நம் முன்னோர்களால் நமக்காக வரையருருக்கப்பட்டு உள்ளனர், அவர்களில் கற்பனை பாத்திரங்களும் உண்டு உண்மை மனிதர்களும் உண்டு.
இதில் காலத்தின் சுழற்ச்சியால் மறக்கப்பட்டவர்களும், மறுக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். பெரும்பாலும் ஒரு காப்பியம் என்பது அன்றைய சூழ்நிலையில் உள்ள மக்களின் பிரதிபலிப்பே ஆகும், அப்படி இன்றைய நம் சமுதாயத்தின் பெண்களின் நிலையை பிரதிபலிக்கும் என்னை பாதித்த வரலாற்று நாயகிகளை பற்றியே சிறியே தொகுப்பே இந்த பதிப்பு.
சிலப்பதிகாரம் என்னும் நூல் தமிழ் மக்களின் வாழ்வியல் நெறிகளை வகுப்பதில் முக்கிய பங்குவகிப்பது, கண்ணகியை பற்றியே பெரும்பாலும் எல்லோரும் பேசுகிற, பேசிக்கொண்டிருக்கிற நிலையில், கண்ணகிக்கு நிகரான மரியாதையுடன் போற்றப்பட வேண்டிய மாதவியை பற்றியே என் கவனம் எல்லாம், ஏனெனில்,
துரோகம் செய்தது கோவலன் தவறு
தூரிகை பெண்ணவள் மீதென்ன தவறு
அவன் உயிரை பறித்தது பாண்டியன் தவறு
துறவியாய் போனவள் மேலென்ன தவறு?!?!
பத்தினி தெய்வம் கண்ணகி கண்ணியம்
பண்ணாக பாடிடும் ஆயிரம் பா!!
மங்காத புகழுடை மாதவி மாண்பினை
போற்றிட பாடினேன், என் தப்பா!!??
எங்கு எப்படி பிறந்தார்கள் என்பதை விட எப்படி வாழ்ந்தார்கள் என்பதே எவரின் பெருமையையும் பறைசாற்றும் என்பது என் தாழ்மையான கருத்து, ஆம் சில கோவலன்களிடமிருந்து மாதவிகளை காப்பதே முக்கியம் ஏனெனில் கண்ணகிகள் அவர்களை அவர்களே காத்துகொள்வார்கள்.
ஆணாதிக்கத்தின் வக்கிரத்திற்கு இரையாக்கப்பட்டவள், வரலாற்றில் அதிகம் கவனிக்கபடாத அகலிகை. தேவர்களின் தலைவன் தவறு செய்தான் முனிவர்களின் முதல்வன் தவறி செய்தான்...இன்றுவரை என்னால் அகலிகைக்கு இழைக்கப்பட்ட அநீதியை சகித்துக்கொள்ள முடியவில்லை,
காமம் கொண்டது இந்திரன் தவறு!!
சாபம் தந்தது கௌதமன் தவறு!!
அவள் கல்லாய் ஆனது ஆண்களின் தவறு!!
பெண்ணாய் பிறந்தது மட்டுமே அகலிகை தவறு!!
இறைவன் இராமன்இறவாப் புகழை,
சில செந்நா பாடட்டும்!!
இரக்கமற்றவர் இரையாய் ஆன,
பெண்ணின் நிலையை,
என் பேனா எழுதட்டும்!!
உலகத்தின் உன்னத உயிர்கள் வாழ்வதே தேவலோகம் அத்தகு உலகின் தலைவன் இந்திரன் அப்படி ஒரு பதவியில் உள்ளவன் இப்படி ஒரு காரியம் செய்யலாமா?கூவியது சேவலா இல்லை இந்திரனா என்பது கூட தவவலிமை பொருந்திய கௌதமனுக்கு தெரியாதா ??வெகுநாளாய் எனக்குள் உரைந்துகிடக்கும் கேள்விகள் இவை?!?! ஆனால் கணவன் உருவில்,அவள் அருகில், விடியாத பொழுதில் சரசம் செய்பவனை ஸ்பரிசத்திலே உணர்ந்திருக்க வேண்டுமாம் அகலிகை ??!!! இது எந்த ஊர் நியாயம் !!!??? புரிந்தவர்கள் விளக்கவும்
இன்றைய சமுதாயத்தில் பெண் விடுதலை என்பது ராமன்களை உருவாக்குவதை விட, இந்திரன்களையும் கௌதமன்களையும் உருவாகவிடாமல் செய்வதே சாலச்சிறந்தது. இன்னும் நான் சொல்ல மறந்தவர் எத்தனையோ?!?! சொல்லில் அடங்கா மண்ணின் மாதர் எத்தனையோ?!?!
இனியேனும் பெண்ணியம், பெண்விடுதலை எல்லாம் வார்த்தைகளாய் இல்லாமல் நம் வாழ்க்கையில் இணையட்டும், பெண்ணை போற்றி மண்ணை காப்போம், நிச்சயம் ஓர் நாள் மெல்ல விண்ணை அளப்போம்.
பெண்ணுக்காய் தமிழில் ஆண்மை சேர்த்த மகாகவியின் மனைவியை பற்றி இங்கே குறிப்பிட வேண்டும் என்று எண்ணுகிறேன்....
குழந்தைகள் கும்பிக்கு இருந்ததை
காக்கைக்கு கொடுத்து கும்மியடித்தானே
அது பேதையின் தவறா?!?!
காலா உன்னை காலால் உதைப்பேன்
சொன்னது கவிஞனின் தவறா??!!
முப்பது வயதில் அவள் முண்டனம் கொண்டது
விதியின் தவறா?!?!
கடவுளின் தவறா?!?!
வருடா வருடம் படையல் படைத்து
என் இனம் வேண்டட்டும் அவரவர்
குலசாமியை!!!
ஒவ்வொரு முறையும் பெண்ணியம் போற்றிட
என் கரங்கள் வாழ்த்தட்டும்
செல்லம்மா மாமியை!!!
...
...
...
"நம்மை பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோமென்று கும்மியடி
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை
என்றெண்ணி இருந்தவர் மாயந்துவிட்டார்;
வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைப்போம்
என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்"
- மகாகவி பாரதியார்
நினைவாகட்டும் பாரதியின் கனவு!!, அதற்க்கு உரமாகட்டும் நம்முடைய நினைவு!!
பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்!!
- கு. ஸ்ரீமணிகண்டன்
Superb. Great work.
ReplyDelete