நானும் என் காதலும்....!!!


அதிகாலை பனியில் நனைந்திட்ட வெள்ளை ரோஜாக்கள்,
 அளவில்லா கேள்விகளால் கரைகளை நுரையாக்கும் அலைகள், 
கிளைகளை நம்பாமல் சிறகுகள் விரித்திடும் சின்னஞ்சிறு பறவை, 
விட்டத்து சாரல் சொல்லும் விண்ணின் கண்ணீர் கதைகள், 

உண்மைக்கும் உழைப்புக்கும் உள்ள இடைவெளியில் நிலம் நனைக்கும் பாட்டாளியின் வேர்வை, 


தரைதடவும் மரங்களும் தன்மையாய் தென்றலும் தவழ்ந்திடும் தபோவனக்குடில், 
உலகத்தின் வெறுப்புகள் எல்லாம் மறந்திடும் அம்மாவின் மடி,
அழகான கவிதை படித்ததும் வழிந்திடும் கண்ணீர் துளி,
உச்சி வெய்யிலில்  உள்ளங்கால் எரிகையில் நிழல் தரும் மரம்....
----
----
----
இப்படி இப்படியாய் எத்தனையோ உன்னத உணர்வுகள் 
அவளை கண்ட ஆதாம் நொடியில்....

அழகுக்கே தெரியாமல் அழகாய் பிறந்தவள் 
உலகுக்கே புரியாத ஓர் உணர்வை தந்தவள்

கடவுள் தேடாத புத்தன் கடவுள் ஆனது போல் 
காதல் நாடாத பித்தன் கவிஞனானேன் 



பல கவிஞர் எழுதிய கவிதைகள் காதலால் 
நான் காதல் எழுத வந்தேன் ஓர் கவிதையால் 

அவள் மரபு மீறாத புதுக்கவிதை - என்னுள் 
விதைத்தால் இயைபு மாறாத தனிக்கவிதை 




கண்ணகி வழி வந்த மாதவி  - என்
கண்களில் கரைந்திட்ட மால்கவி!!




மேகமென கருத்து ராஜ நாகமென நீளும் கூந்தல் கண்டிருந்தால் நக்கீரன் தப்பி இருப்பார் ...
பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மம் உண்டென ஒப்பியிருப்பார் !!!

அரம்பை தேசவில்லென வளைந்திருக்கும் புருவங்கள் 
அழகான பெண்களுக்கே உரித்தான கர்வங்கள் 

இதழ்களில் வழிந்திடும் குறுநகை தாமரை வண்ணம்
இழையாய் விழுந்திடும் கன்னக்குழியோ பழரசக்கிண்ணம் 

வெண் நிற பற்களின் வரிசையை கண்டால் எறும்பினம் வெட்கம் கொள்ளும், 
பற்களின் எழிலினை அன்றாடம் ரசிக்கவே எட்டி பார்க்கும் மூக்கின் நீளம்,
 மேலாடை மறைத்திடும் பெண்மையின் சாயலை 
காணாது போனதால் அழுகுமோ மேகங்கள்?!?!

 நூலாடை தாங்கிடும் இடையின் வளைவுகள்  - எவருக்கும் 
புரியாத பெர்முடா முக்கோண தீவுகள்!!!



அதுவரை சூரியன் சுற்றிகொண்டிருந்த பூமி 
கலிலியோவின் கட்டளைக்கு பிறகு 
சூரியனை சுற்றியது..



அவள் கண்களை 
கண்ட நொடிமுதல் அவளையே சுற்றுகிறது 
என் மனம் - கலிலியோவை தான் தேடுகிறேன்!!!


விண்மீன்கள் விண்ணப்பம் நீட்டியது அவளிடம் 
அமாவாசை இரவுகளில் வீதியில் செல்லாதே -
பூமியில் எப்படி பௌர்ணமி என்று வானில் குழப்பங்கள்?!?!



அவள் கடவுளை தரிசிக்கும் நாட்களெல்லாம் 
கோவிலுக்கு குடமுழுக்கு நாட்கள் என்றே கோபுரத்தின் எண்ணங்கள்!!!!

ஓவியம் வரைந்திடும் ஓவியம் - அவள் 
ஆடை சரிசெய்யும் தோரணை

அழாகான எல்லாமும் அவள் போலவே இருக்க 
அவள் மட்டும் எல்லாவற்றையும் விட அழகாகவே?!?!


பெரிதினும் பெரிது கேள்!!! தமிழ்ப்பாட்டன் சொன்னது 
அரிதிலும் அரிது அவள் நேசம் தந்தது,



என்னை கவிதைக்கு பிடிக்கும் அளவுக்கு 
காதலுக்கு பிடிக்கவில்லை - சரிதானே 
காக்கை குயிலாகலாம் மயிலாகுமா?!?!

கருவிலே இறந்தே பிறந்த குழந்தைபோல் 
பிறக்கும்முன்னே இறந்த எங்கள் காதல் பலிக்கவில்லை
அதனாலென்ன உறவைத்தான் பிரித்து சென்றால் 
உணர்வுகளை அல்ல - என் காதல் என்னுடனே ...



காதலே இல்லாமல் காதலர் தினங்களை கடக்கும் 
காதலர்களுக்கு நடுவில் 
காதலியே இல்லாமல் நானும் என் காதலும்....!!!


கற்பனையும் எழுத்தும் ...
-  குருஸ்ரீ 

Comments

Popular posts from this blog

வாலி - தனி கவிதைகள்!!! - சில நீங்கள் வாசிக்க!!!

மயில் !!!

புதுக்கவிதைக்கு மணிவிழா!!!