பட்டாம்பூச்சி விற்பவன் எங்கே? வாடுது பட்டாம்பூச்சிகள் இங்கே ?!

சினிமா என்னும் அரிய ஊடகத்தின் மேல் அளப்பரிய ஆர்வம் கொண்டவன் நான். சினிமா என்றால் வெள்ளித்திரையில் மின்னும் நட்சத்திரங்களை மட்டுமன்றி தொழில்நுட்ப ரீதியிலும் சினிமாவை ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தவன்.



அதுவும் திரை இசை பாடல்கள், உங்கள் எல்லாரையும் போலவே என்னுள் பல ஏகாந்த அதிர்வுகளை உண்டாக்கியது என்பது உண்மையே!!!. 

எம் எஸ் வி, கே வி மகாதேவன், சங்கர் கணேஷ், இளையராஜா, சந்திரபோஸ், வி குமார், ரகுமான், தேவா, சிற்பி,வித்யாசாகர், ராஜ்குமார், யுவன் 

என மிக நீளமான பட்டியல்...குறிப்பாக எந்த ஒரு பாட்டிலும் அதன் வரிகளை கவனிப்பதில் எனக்கு எப்போதும் ஒரு தனி ஆர்வம் உண்டு அதற்கு நான் வளர்ந்த சூழலும் ஓர் காரணம்.

பாரதி, பாரதிதாசன், ராமையா தாஸ், மருதகாசி, கொத்தமங்கலம் சுப்பு, கவி கா. மு. ஷெரிஃப், கவியரசர் கண்ணதாசன், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,காவியக்கவிஞர் வாலி,புலமைப்பித்தன்,மூ. மேத்தா, முத்துலிங்கம், அறிவுமதி , பிறைசூடன், வைரமுத்து, பழனிபாரதி, விஜய், கமல், சினேகன், 

என இதுவும் ஒரு நீண்ட பட்டியல்....ஒவ்வொரு பாடல்களிலும் வரும் உவமைகள், வார்த்தை வடிவங்கள், இசைக்காக கவிஞர்கள் வார்த்தைகளை உருவாக்கும் நளினம் இவற்றை ஆராய்ந்து ரசிப்பதில் எனக்கு என்றும் ஒரு அலாதி பிரியம்.



ஒரே மாதிரியான சூழ்நிலைக்கு ஒவ்வொருவரும் கையாண்ட உவமைகள் வார்த்தைகள் என தேடி தேடி ரசிப்பதில் ஒரு தனி இஷ்டம். 

பட்டுக்கோட்டையின் வரிகளில் உள்ள சமுதாய நெறி, கண்ணதாசனின் மொழியியல் அழகியல், வாலியின் வார்த்தை வலிமை, புலமைப்பித்தனின் மொழி ஆளுமை, முத்துலிங்கத்தின் இலக்கிய திறன், மேத்தாவின் புதுமை சிந்தனை, வைரமுத்துவின் கவித்துவம், அறிவுமதியின் அறிவாற்றல் என நான் ரசிக்கும் கவிஞர்கள் ஏராளம்.....

எந்த ஒரு மனிதனுக்கும் தன்னுடைய விடலை பருவம் அதாவது 16 முதல் 22 வரை ..(என் வரையறை) இந்த வயதில் கேட்டு ரசிக்கும் காதல் பாடல்கள் என்பது ஒரு தனி சுகம்....என்னுடைய அத்தகைய வயதில் வாலியும் வைரமுத்துவும் வியாபித்து இருந்ததற்கு இளையராஜா ஒரு காரணம், 

இருப்பினும்.....எனக்குள் இருக்கும் காதல் உணர்வினை மயிலிறகால் வருடிய பாடல்கள் சில அல்ல பல உண்டு அவற்றில் நான் என்றென்றும் முணுமுணுக்கும் சில பாடல்கள், அன்று என் கற்பனை கனவிலே தவழ்ந்த அற்புத தருணங்களில் என்னை முழுவதுமாய் ஆட்கொண்ட வரிகள் என  நான் நினைத்து பார்த்தால் 2000க்கு பிறகுள்ள பாடல்கள் அதிகம் ....



"வயது வா சொல்கிறது" நான் ரகசியமாய் கேட்டு ரசிக்கும் பாடல் 
"தேவதையை கண்டேன்" என்னுள் ரீங்காரம் இடும் வார்த்தைகள் 
"நினைத்து நினைத்து பார்த்தேன்" நினைத்து நினைத்து நான் ரசிக்கும் உவமைகள் 

"எங்கேயோ பார்த்த மயக்கம்" இன்றளவும் என் காதல் கனவுகளின் முதல் பாடல் 

எத்தனையோ பெரும் கவிஞர்கள் தமிழ் திரையுலகில் அற்புதங்களை நிகழ்த்தி இருப்பினும் ...பல ஆண்டுகளில் தனித்து நின்று வெற்றி பெற்றவர்கள் சிலரே 

என் தலைமுறை அதிகம் ரசித்த. முணுமுணுத்த, கனவில் மிதந்த வரிகளுக்கு ஒருவர் சொந்தம் ...........இனி இல்லை அந்த கவி வசந்தம் !?!?


இளம் வயதில் மரணிக்கும் கவிஞர்களில், கலைஞர்களில், படைப்பாளிகளில் இவரே கடைசி என்று எழுதிப்போடுங்கள், எமனுக்கு புரியும் மொழியில்... அதிகம் தமிழ் அறிஞர்களேயே குறிவைப்பதால் எமனும் தமிழன் தானோ ??!?! என்றோர் சந்தேகம் எனக்குண்டு...

அன்றாடம் அநேகமாக பல இறப்புகளும், பிறப்புகளும் நிகழ்வது இயற்கைதான் இருப்பினும் தன் மொழி அறிவால் பலரின் இதயங்களில் கையொப்பம் இட்ட அந்த உன்னத கவிஞனின் இழப்பு கொஞ்சம் அல்ல நிறையவே அநியாயம் ....ஆம் ..
நா. முத்துக்குமார் ..திரைப்பாடல் மட்டும் இயற்றிய விற்பனை கவிஞன் அல்ல, நவீன தமிழ் இலக்கியத்தின் ஆழத்தை ஆராய்ந்த என்றென்றும் அழிக்க முடியாத அற்புத எழுத்தாளன். தனக்கென ஒரு தனி நடை அதற்கேற்ற ஒரு மொழி நடை என்று கவிதை, கட்டுரை,ஹைக்கூ, என இலக்கியத்தின் ஒவ்வொரு கதவுகளையும் பல ரசிகர்களுக்கு தென்றல் வீச திறந்த ஈடில்லா அறிஞன் 

"கருவாசல் விட்டு வந்த நாள் தொட்டு மறுவாசல் தேடியே
விளையாட்டு கண் திறந்து பார்த்தால் பல கூத்து,
கண் மூடி கொண்டால் ??" 

புதுப்பேட்டை படத்தில் வரும் இந்த ஒரு பாடல் முத்துக்குமாரின் அறிவும் மொழியும் இன்னொரு நூற்றாண்டுக்கு விதைத்த தத்துவ வேர். எப்படி ஒரு தீர்க்கம் ...எளிமையான வார்த்தைகள், ஆழமான கருத்துகள் என எழுதுவது அவ்வளவு எளிதல்ல...

எழுதி எழுதி தோல்வி அடைந்து மீண்டும்  முயன்று கொண்டிருப்பவன் நான் அதனால் இதை சொல்ல எனக்கு நிறையவே அருகதை உண்டு  ....

ஒரு கருத்தை, நல்ல தரத்தில், அழகு மொழியில், அனைவருக்கும் கொண்டு செல்வது எல்லோருக்கும் வர அது வாந்தி அல்ல ...வரம் !!! 


தன் முதல் பாடலின் உவமைகளால் தமிழை வீரநடை போட வைத்த கவிஞர் நா. முத்துக்குமார்,

" நட்சத்திர கால் பதிக்கும் வாத்து கூட்டம் பிடிச்சிருக்கு,  காதல் தோல்விதானோ? யார் அறியக்கூடும்? ஆட்டுத்தாடி பிடிச்சிருக்கு, மண்ணில் விழுந்தாலும் என்றும் உயிர் வாழும் மலையருவி பிடிச்சிருக்கு,  கைப்பிடி நீண்ட குடை போன்ற பனைமரம் பிடிச்சிருக்கு"

எவ்வளவு எளிமையான ஆழமான உவமைகள் ...?!?! நீண்ட பயணத்தின்  முதல் அடி இந்த வரிகள்,

"பட்டாம்பூச்சி விற்பவன்"
"அணிலாடும் முன்றில்"
"குழந்தைகள் நிறைந்த வீடு" 
"நியூட்டனின் மூன்றாம் விதி"
"கிராமம், நகரம், மாநகரம்"
"வேடிக்கை பார்ப்பவன்"

பேராழியின் சிறு துளிகள் இந்த புத்தகங்கள் ...வெறும் வார்த்தைகள் அல்ல ஒவ்வொன்றும் ரத்தமும் சதையும் இணைந்த உறவுகளின் கூடல், தமிழ் என்னும் கோவிலின் அணையா தீபத்தின் ஒளிப்பரல்கள்...

ஒரு முறை "பட்டாம்பூச்சி விற்பவன்"  வாசித்து பாருங்கள் ....அத்தனை மிருதுவான கவிஞனுக்கா இப்படி ஒரு இறப்பு ?? 


உறவுகளை நேசிக்கும் அற்புதமான தமிழன்,  தன் ஒவ்வொரு படைப்பிலும் அன்பும் உறவும் அழகாய் பின்னி இணையும் அதிசயம் உண்டு அவர் வரிகளில் 

கண்களில் கண்ணீர் வழிய இந்த பதிவினை எப்படி முடிப்பது என்றறியாமல் தவிக்கிறேன் வேறு வழியின்றி அவரின் வரிகளில் துணை கொண்டே முடிக்கிறேன்...

" பனித்துளியின் நுனியில் பிரதிபலிக்கிறது சூரியன். இன்னும் கொஞ்ச நேரத்தில் பனித்துளி உருகிவிடும் என்பது சூரியனுக்கு தெரியும். தான் கரைந்துவிடுவோம் என்பது பனித்துளிக்கும் தெரியும். ஆனாலும், சூரியனை சிறைப்பிடித்த அந்த ஒரு கணத்தின் பெருமிதமே பனித்துளியின் வாழ்க்கை" 

நிச்சயம் ஒரு யுகம் கடந்த எழுத்தாளனால் மட்டுமே சிந்திக்க கூடிய வரிகள் என்னுள் மட்டுமல்ல பலருக்கும் தன்னம்பிக்கை விதைக்கும் சாகாவரம் பெற்ற வரிகள் ....

அந்த பனித்துளி போன்வறாவதா  உங்கள் வாழ்க்கை ?!?! இவ்வளவு சீக்கிரம் காய்வதா அதன் வேட்கை ?? 

நான் வேடிக்கை பார்ப்பவனை, வேடிக்கை பார்த்த கோடி இளைஞர்களில் ஒருவன் ...எங்கள் ஒவ்வொருவர் கண்ணில் இருந்து வரும் நீர்த்துளிகள் பனித்துளி அல்ல ...அவ்வளவு எளிதில் கரையாது ...... 
எந்த சூரியனும் கரைக்காது ...


உங்களுக்கான கண்ணீரஞ்சலி எங்கள் விழியில், இதோ கனத்த இதயத்தோடு கவிதாஞ்சலி உங்கள் வழியில்,
 
அவன் சிரஞ்சீவி கவிஞன், சிறகில்லா பறவை, செடியறியா மலர்,வானம் தொடாத மேகம்,வனம் காணாத மரம்,காஞ்சி ஈன்ற மற்றுமொரு அறிஞன் !!!

இவன் இன்னொரு நூற்றாண்டு கவிஞன் என கொண்டாடும் வேலையில்காற்றோடு போவது நியாயமா? 
பூக்களை வாசித்தவன், புன்னகையில் யோசித்தவன், பட்டு பூச்சிகளுக்கு பாட்டாடை கட்டியவன்,இசையின் கருவை சுகப்பிரசவம் ஆக்கியவன் 
மொழியும் அறிவும் ஒரு சேரஇசைத்தட்டில் மீட்டியவன், இளமையும் இனிமையும் பலர் ரசிக்க வரிகளில் கூட்டியவன் 
யார் உன்னை  அதற்குள் காலனுக்கு 
அடையாளம் காட்டியவன்?விவஸ்தை கெட்டவன்தானே அந்த எமன் ?


பூமாலையாய் அன்றாடம் பாமாலை பாடியவன் இன்று காமாலையில் வீழ்வதா? தமிழ் தள்ளாமையில் தாழ்வதா?
உன் அணிலாடும்  மூன்றில்...அணில்கள் உன்னை தேடாதா ??நீ இல்லாமல் வாடாதா ?!?!
உன் ஒவ்வொரு ஹைக்கூவிலும்எங்கள்  செல்கள் சிணுங்கின நவீன கவிதையெனும் பேராற்றங்கரையில் ஒதுங்கின 
முத்தமிழும் காக்கும் முத்துகுமரனையா ?  காலன் கொண்டு செல்வது ?! காற்றில் தவழ்ந்த அவன் வரிகளையா !!காலம் கரைப்பது ? விதியை நொந்தா தமிழ் மொழி தவிப்பது ?
இனி போதும் விதியின் விளையாட்டு இனி நாங்கள் கேட்க ஏது உன் மொழிப்பாட்டு மதிகெட்ட எமனே போதும் இதோடு நிப்பாட்டு !!!
பட்டாம்பூச்சி விற்பவன் எங்கே ...?
வாடுது பட்டாம்பூச்சிகள் இங்கே ?!
 - குருஸ்ரீ 

Comments

  1. உங்கள் கவிதையின் எளிமை சிறப்பு...... இனி உங்களில் ஒருவன் நான்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாலி - தனி கவிதைகள்!!! - சில நீங்கள் வாசிக்க!!!

புதுக்கவிதைக்கு மணிவிழா!!!

மயில் !!!